தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னிதழ் - மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 12 ஜனவரி 2018

1 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஒரு அங்கமாக நமது ”மின்தமிழ்மேடை”  மின்னிதழ் வெளியீடு அமைகின்றது. 

காலாண்டு இதழாக ​2015ம் ஆண்டு ஏப்ரல் முதல் ​வெளிவ​ரும் இந்த மின்னிதழில், தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுமமான மின்தமிழில் வெளியிடப்பட்ட  தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளும் ஆய்வுக் கட்டுரைகளும்  தொகுக்கப்பட்டு வெளியிடப்படு​கின்றன.

இன்று  வெளியீடு காணும்  இந்தக் காலாண்டிதழ் கூகள் புக்ஸ் வலைத்தளத்தில் பொது மக்கள் வாசிப்பிற்காக இலவசமாக வழங்கப்படுகின்றது என்பதனையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.​​இதழை வாசிக்க!​ https://books.google.com/books/about?id=9rxHDwAAQBAJ&hl=en

இந்த வெளியீட்டின் கருப்பொருளாக அமைவது "நெய்தல் நிலத்தில் தொடரும் வாழ்க்கை போராட்டங்கள் " என்பதாகும். 

இந்த இதழில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகள்

​​
பொறுப்பாசிரியர்: முனைவர். தேமொழி.


வாசித்து கருத்து பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர் சுபாஷிணி
[தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை]​
 


மண்ணின் குரல்: ஜனவரி 2018: தூத்துக்குடி நெய்தல் நில மக்கள் - பகுதி 2

0 மறுமொழிகள்
வணக்கம்.


பாண்டிய நாடு முத்துடைத்து என்கின்ற மிக நீண்ட கால பழமொழியின் ஆணிவேர் இன்றைக்கும் இருக்கின்ற இடம் தூத்துக்குடி. பாண்டியநாட்டின் முத்துக்கள் எகிப்திய, ரோமானிய நகரம் வரை வணிகம் செய்யப்பட்டன என்கின்ற வரலாற்றுப் பெருமைக்கு சொந்தமான இடம் அன்றைய பாண்டிய நாட்டின் மிக முக்கியமான துறைமுகப்பகுதியாக இருந்த கொற்கை, தொண்டி, தூத்துக்குடி எனலாம். நெய்தல் நில மக்களில் கடலோரக் குடிகளின் மீன்பிடிப்பவர்களைப்போல ஆழ்கடலில் முத்தும், சங்கும் எடுப்பதில் தூத்துக்குடி கடலோர மக்கள் அன்றும் இன்றும் முன்னணியில் இருக்கின்றார்கள். 

ஆனால் வரலாற்றுப் பெருமையையும் பொருளாதார வளத்தையும் ஒரு சேர உருவாக்கித் தந்த இக்கடல் குடிகளின் வாழ்வில் முன்னேற்றம் இல்லை. தூத்துக்குடியில் தெரேஸ்புரம் மற்றும் தூத்துக்குடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களின் முதன்மைத் தொழில் மீன் பிடித்தலும் கடலில் மூழ்கி சங்கெடுத்தலுமே. இந்தச் சங்குகள் அழகு சாதனப்பொருட்களாகவும் வழிபாட்டுப் பொருட்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. 

இத்தகைய பொருட்களை எடுப்பதற்காக ஆழ்கடலில் மூழ்கிப் பணி செய்யும் இந்த முக்குளிப்பவர்கள் படும் துன்பமும் துயரங்களும் கணக்கில் அடங்காதவை. தொடர்ந்து கடல் நீரில் மூழ்கி இருப்பதினால் கடலின் அழுத்தத்தினாலும் கடல் உப்பு நீரின் அரிப்பினாலும் அவர்களின் உடல் விரைவிலேயே நசிந்து முதுமையடைந்து விடுகிறார்கள். 40 வயதிற்குமேல் அவர்கள் நடமாடத்தகுந்த மனிதர்களாக இருக்க முடியவில்லை. இயற்கை தரும் தண்டனை இதுவென்றாலும் செயற்கையாக அவர்களுக்குத் துன்பம் நேர்கின்றது . முக்குளிக்கும் போது அவர்கள் பயன்படுத்துகின்ற நீர் மூழ்கி உபகரணங்கள் போதிய பாதுகாப்போடு இல்லை. தரமற்றவையாகவும் பாதுகாப்பு அற்றவையாகவும் இருப்பதினால் கடலிலேயே மாண்டவர்களும் உண்டு . மீண்டவர்களில் பலர் உடல் உறுப்புக்களை இழந்து ஊனமுற்றோராக வாழும் நிலையும் இருக்கின்றது. 

கடலின் தாக்கத்தினால் நிரந்தர நோயாளிகளாக மாறியிருக்கின்ற இக்கிராம மக்களுக்குப் போதிய மருத்துவ உதவி அளிக்க வேண்டிய அமைப்புகளோ இவர்களைக் கண்டு கொள்வதில்லை. தன்னார்வத்தோடு உதவக்கூடிய ஒரு சில அமைப்புக்களை இவர்கள் நாடுகிறார்கள். ஆயினும் அதுவும் எட்டாக்கனியாகவே உள்ளது

விழியப் பதிவைக் காண:   http://video-thf.blogspot.de/2018/01/2.html
யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=IwGDUPR0hmY&feature=youtu.be

இப்பதிவுக்கான  ஏற்பாடுகளில் உதவிய    சாயர்புரத்தைச் சேர்ந்த சகோதரர் மைக்கல், நண்பர் ஒரிசா பாலு ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மண்ணின் குரல்: ஜனவரி 2018: தூத்துக்குடி நெய்தல் நில மக்கள் - பகுதி 1

0 மறுமொழிகள்
வணக்கம்.

​தமிழ்ப் பண்பாட்டில் நெய்தல் நிலத்தின் பங்களிப்பு அளப்பரியது. ஆனால் தற்காலத்தில் நெய்தல் நில மக்களைப் பற்றின புரிதலும் அறிதலும் மற்ற நில மக்களுக்கு மிகக் குறைவாகவே இருக்கின்றது. தமிழகத்தின் வணிகப்பொருட்களுக்கு உலகம் முழுவதும் கடல்வழித்தடங்களைக் கண்டுபிடித்து உலகம் முழுமையும் கொண்டு போய் சேர்த்த பெருமை நெய்தல் நில மக்களுக்கே உள்ள தனிச்சிறப்பு. 

நெய்தல் நில மக்கள் இல்லாமல் போயிருந்தால் தமிழகப் பண்பாட்டு விழுமியங்கள் உலகின் பல பாகங்களுக்குப் போய் சேர்ந்திருக்காது என்பது நிதர்சனமான உண்மை. காலங்கள் மாறி சமூக பொருளாத அமைப்புகள் மாறிய சூழலில் கடல் உணவுப் பொருட்களை பிடிப்பவர்களாகவும், முத்துக்குளிப்பவர்களாகவும், உப்பு காய்ச்சுபவர்களாகவும் இறுதியாக கடலோடிகளாகவும் இருந்த மக்கள் நெய்தல் நில மக்கள். 

தற்போது கடலோடி தொழில் முற்றிலுமாக நெய்தல் நில மக்களிடமிருந்து மறைந்து போய் விட்டது. மீன் பிடி தொழிலைத் தவிர மற்றவை தமிழகக் கடலோரங்களில் சிதறிய வகையில் சிறு சிறு கிராமத்து குழுக்களின் தொழிலாக இருந்து வருகின்றது. இந்த வீழ்ச்சியின் காரணமாக வெளி உலகத்துத் தொடர்புகள் குறைந்து போய் இம்மக்களின் மீதான பாராமுகம் அதிகரித்துள்ளது. 

இயற்கை சீற்றங்களான ஆழிப்பேரலைகள், புயல்கள் பெருமழை சீற்றங்கள் ஆகியவற்றினால் உடனடியாகவும் நேரடியாகவும் பாதிக்கப்படுகின்ற மக்கள் இம்மக்களே. அண்மையில் ஓகிப் புயல் இம்மக்களை மிக மோசமாகப் பாதித்ததும், நூற்றுக் கணக்கானவர்கள் இன்று வரை காணாமல் போயிருப்பதும், திரும்பி வராதவர்களை இறந்தவர்களாக அறிவித்து கடல் நீரிலேயே தர்ப்பணம் செய்ததும் அண்மைக் கால அழிக்க முடியாத சோகங்கள். 
இவ்வளவு கணத்த பின்னணி கொண்ட நெய்தல் நில மக்கள் தூத்துக்குடி கரையோரம் முக்குளிப்பு கிராமங்களில் ஒன்றான அலங்காரத்திட்டு பகுதியிலிருந்தது முத்துக்குளிக்கும் மக்களின் வாழ்வைப் படம் பிடிக்கும் ஒரு சிறிய பண்பாட்டுப் பதிவு தான் இது. 

​​இந்தப் பதிவில் தூத்துக்குடி அலங்காரத்திட்டு பகுதியின் பங்குத் தந்தை பாதிரியார் ஜோன் செல்வம் அவர்கள் நமக்காக இப்பகுதி பற்றிய சில செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றார். இப்பதிவில் 
  • 1754ல் இப்பகுதிக்கான கத்தோலிக்க பங்கு அமைக்கப்பட்ட செய்தி, இப்பகுதியில் அமைந்திருக்கும் கடற்கரையோர சிறிய தேவாலயம், அதில் பூசிக்கப்படும் அலங்கார மாதா 
  • கடலில் கிடைக்கும் நுரைக்கல்லை எடுத்து செங்கல் போல வடிவமைத்து வீடு கட்டும் பாணி 
  • சங்கு குளிக்கும் தொழில் 
..இப்படிப் பல செய்திகளை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றார். 

விழியப் பதிவைக் காண:   http://video-thf.blogspot.de/2018/01/1.html
யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=IBX8JnSwi2M&feature=youtu.be

இப்பதிவுக்கான  ஏற்பாடுகளில் உதவிய    சாயர்புரத்தைச் சேர்ந்த சகோதரர் மைக்கல், நண்பர் ஒரிசா பாலு ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


THF Announcement: E-books update:1/1/2018 *ஓலைச்சுவடி- தன்வந்திரி உடற்கூறு

0 மறுமொழிகள்
வணக்கம்

அனைவருக்கும் ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு ஓலைச்சுவடி நூல்  மின்னூல் வடிவில் இணைகின்றது.

ஓலைச்சுவடி:   தன்வந்திரி உடற்கூறு நூலைப் பற்றி

தமிழகத்தில் இன்று கிடைக்கின்ற உடற்கூறு ஆய்வு பற்றிய சுவடிகளில் இதுவும் ஒன்று. இதுவே இன்று நமக்குக் கிடைக்கின்ற உடற்கூறு ஆய்வினை விளக்கும்  முதல் சுவடியாகவும் இருக்கலாம். இதனை ஆராய வேண்டும். இந்த உடற்கூறு பற்றின சுவடியைத் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகப்படுத்துவதில் தமிழ் மரபு அறக்கட்டளை பெருமை கொள்கின்றது.

மேலும், இச்சுவடியை ஆராய்ந்து இதனைப் பதிப்பிக்க தமிழ் மரபு அறக்கட்டளை  எண்ணம் கொண்டுள்ளோம். இந்தச் சுவடிக்கு விளக்கவுரை பொழிப்புரை எழுத ஆர்வமுள்ள மருத்துவம் தெரிந்த தமிழறிஞர்கள், சுவடிப்புல ஆய்வாளர்கள், பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி தமிழ்த்துறையினர் எம்மைத் தொடர்பு கொள்க. 

இந்தச் சுவடி நூல் பிரான்சு நாட்டிலுள்ள பாரீஸ் தேசிய நூலகத்தில் பாதுக்கக்கப்படும் ஓலையாகும்.  இதனை நூலகத்தின் அனுமதி பெற்று மின்னாக்கம் செய்தவர்:முனைவர்.சுபாஷிணி  

மின்னாக்கம், மின்னூலாக்கம்: முனைவர்.சுபாஷிணி  , ஜெர்மனி

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 468

நூலை  வாசிக்க இங்கே அழுத்தவும்!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES