மண்ணின் குரல்: ஜனவரி 2014: டத்தோஸ்ரீ ச. சாமிவேலு அவர்களுடனான பேட்டி

0 மறுமொழிகள்

வணக்கம்.

அனைவருக்கும் பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

இன்றைய பண்டிகை நாளின் சிறப்புக்கு அணிகலனாகத் தமிழ் மரபு அறக்கட்டளை ஒரு விழியப் பதிவை வெளியிடுகின்றோம். 

  • மலேசிய இந்தியர் சமூக, மற்றும் அரசியல் வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஒரு அரசியல் தலைவர்...
  • மலேசிய அமைச்சில் மிக  நீண்ட காலம் அமைச்சராகப் பணியில் இருந்தவர் என்ற கூடுதல் தகுதியும் கொண்டவர்..
  • சாதனைத் தலைவர் என பெருமையுடன் அழைக்கப்படும் தமிழர்..
டத்தோ ஸ்ரீ ச. சாமி வேலு அவர்கள்!

இந்தியர்களின் மலேசியாவுக்கானத் தொடர்பு என்பது புதிதானதல்ல. கிபி 2ம் நூற்றாண்டு தொடங்கி புத்த மதம் பரப்ப அனுப்பட்ட பலர் ஏனைய கிழக்காசிய நாடுகளுக்கு வந்தது போலவே மலேசியாவிற்கும் வந்தனர். இந்திய-மலாயா கடல் வணிகமும் அப்போது  மிகப் பிரபலமாக இருந்தது. இது நீண்ட காலம் நீடித்தும் வந்தது. அதன் பின்னர் 11ம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனின் கடாரம் மீதான படையெடுப்பு இங்கு தமிழர் பாரம்பரியத்தையும் ஹிந்து சமயத்தையும் மேலும் பரவச் செய்தது. அதற்குப் பின்னர் மீண்டும் 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் தொடங்கி வணிகம் செய்யவும், தண்டவாளம் அமைக்கவும் ரப்பர் செம்பனை தேயிலைக் காடுகளில் கூலிகளாகப் பணிபுரியவும், அரசியல் கைதிகளாகவும் என பல்வேறு பரிமாணங்களில் தென்னகத் தமிழர்கள் மலாயா வர அன்றைய ஆங்கிலேய காலணித்துவ ஆட்சி வழி அமைத்துக் கொடுத்த்து.

இச்சூழலில் ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியில் மலாயா இருந்தது. இந்த நாட்டின் பெரிய மூன்று பெரும்பான்மை இனங்களான மலாய், சீன, இந்தியர்கள் மத்தியில் படிப்படியாக நாட்டிற்குச் சுதந்திரம் வேண்டும் என்ற எண்ணம் தோன்ற பல அரசியல் நடவடிக்கைகள் தோன்றியன. இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த காலகட்டத்தில் சுதந்திர தாகம் மிக ஆழகாமப் பரவி பல அரசியல் நிகழ்வுகளுக்கு வித்திட்டன. 

மலேசியாவின் அரசியல் கட்சிகளில் மூத்த கட்சி என்ற பெருமையைப் பெருவது மலேசிய இந்தியன் காங்கிரஸ்( ம இ கா)  Malaysian Indian Congress (MIC). 1946ம் ஆண்டு இந்த அரசியல் கட்சி தொடங்கப்பட்டது. இதன் முதல் தலைவராகப் பொறுப்பேற்றவர் திரு ஜோன் திவி (1946 - 1947) அவர்கள். இவருக்குப் பின்னர் தலைவர்களாக பட் சிங் (1947 - 1950), ராமனாத செட்டியார்(1950 - 1951), குண்டன்லால் (1951 - 1955), தேசியத் தோட்டப்புற தந்தை என பரவலாக அழைக்கப்பட்ட, தமிழர்களுக்கு மிகப் பல தொண்டாற்றிய துன் வி.தீ.சம்பந்தன் (1955 - 1973), டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ வீ மாணிக்கவாசகம் (1973 - 1979) என்ற தலைவர்கள் வரிசையில் ஏழாவது தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டவர் டத்தோ ஸ்ரீ சாமி வேலு சங்கிலிமுத்து அவர்கள். 1979 முதல் 2010 வரை, ஏறக்குறைய 31 ஆண்டுகள் இந்த அரசியல் கட்சியின் தலைவராக இருந்து கட்சிக்கும் மலேசிய இந்தியர்களுக்கும் சேவை செய்தவர் இவர்.

மலேசியத் தமிழர் நலன் தேவைகளுக்காக ம இ கா என்பதோடு நின்று விடாமல் நாட்டின் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர் இவர். இவரது காலத்தில் தான் மலேசிய நெடுஞ்சாலைப் பணிகள் தொடங்கப்பட்டு இப்போது இருக்கும் மலேசியா முழுமைக்குமான வடக்கு-தெற்கு, கிழக்கு மேற்கு என அனைத்து நெடுஞ்சாலைகளும் அமைக்கப்பட்டன. வடக்கில் தாய்லாந்திலிருந்து தெற்கில் சிங்கப்பூர் வரை செல்லும் தரம் வாய்ந்த சாலை அமைந்ததும் இக்காலகட்டத்தில் தான்.

மிகச் சாதரண குடும்பத்தில் மிகுந்த ஏழ்மை நிலையில் பிறந்து வளர்ந்து பல்வேறு சிரமங்களுக்கிடையே கட்டிடத்துறை ஆர்க்கிடெக்டாக கல்வியில் தன்னை உயர்த்திக்கொண்டு, சமூக நலனில் ஆர்வம் கொண்டு  அரசியல் கட்சியில் ஈடுபட்டு படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்தவர் இவர். இன்று இவரது முயற்சியில் மலேசியத் தமிழ் மாணவர் நலனுக்கென்று ஒரு பல்கலைக் கழகம் கடாரம் என்று நாம் முன்னர் அறிந்த கெடா மானிலத்தில் AIMS  என்ற பெயரில் உருவாக்கப்பட்டு இயங்கி வருகின்றது. 

இத்தகைய சிறப்புக்கள் வாய்ந்த டத்தோ ஸ்ரீ ச.சாமி வேலு அவர்களது விழியப் பதிவு பேட்டியே இன்றைய பொங்கல் தின சிறப்பு வெளியீடாக மலர்கின்றது. 

அக்டோபர் மாத இறுதியில்  மலேசியாவில் 28.10.2013 அன்று டத்தோ ஸ்ரீ ச.சாமி வேலு அவர்களின் அமைச்சரக அலுவலகத்தில் இந்தப் பதிவு செய்யப்பட்டது. 

பேட்டி காண்போர்: முனைவர்.க. சுபாஷிணி , டாக்டர்.நா.கண்ணன்
பேட்டி கேமரா ஒலிப்பதிவு: டாக்டர்.நா.கண்ணன், முனைவர்.க. சுபாஷிணி 

இந்தப் பேட்டியில் டத்தோ ஸ்ரீ ச.சாமி வேலு அவர்கள் 
  • ம இ கா வின் வரலாறு
  • தமிழிலேயே அரசியல் கூட்டங்கள் நிகழ்த்தும் வகையில் நிகழ்ந்த மாற்றங்கள்
  • தமிழுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையிலான பல முயற்சிகள்
  • சமூக மேம்பாட்டிற்கு கல்வி
  • தமிழர்களுக்காக ஒரு பல்கலைக்கழகம் - AIMS  பல்கலைக்கழக உருவாக்கம்
  • தனது இளமை கால அனுபவங்கள்
  • இந்திய சுதந்திர நடவடிக்கைகள் மலாயாவில் ஏற்படுத்திய தாக்கம் 
  • மலேசிய சாலை அமைப்பு  - இந்தியாவில் மலேசிய சாலை அமைப்பு முயற்சிகள்
என பல்வேறு விஷயங்களை விளக்குகின்றார்.

இந்தப் பேட்டியைக் காண: http://video-thf.blogspot.de/2014/01/2014.html

யூடியூபில் இப்பேட்டியைக் காண: http://www.youtube.com/watch?v=iq2F6ZBMRLU

Inline image 1
 டத்தோ ஸ்ரீ ச.சாமி வேலு அவர்களுடன் பேட்டியின் போது


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி 
[தமிழ் மரபு அறக்கட்டளை]

மறுமொழிகள்

0 comments to "மண்ணின் குரல்: ஜனவரி 2014: டத்தோஸ்ரீ ச. சாமிவேலு அவர்களுடனான பேட்டி"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES