தமிழ் மரபு அறக்கட்டளை சித்திரை புத்தாண்டு சிறப்பு வெளியீடு - நாடார் குல மித்திரன்

2 மறுமொழிகள்


வணக்கம்.

அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இந்திய சுதந்திரத்துக்கு முன்னர் நமது முன்னோர்களின் வழித்தடத்துடன் அகிம்சா வழியில் சுதந்திர சிந்தனைகளைத் தொடர்ந்து விதைத்து வந்தவர்கள் குறிப்பாக 20ம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் பலர். தமது சிந்தனைகளைத் தமிழர் என்ற ஒரு இனத்துக்கு என ஒட்டு மொத்தமாகவும் தனித்தனியாக இயங்கிய ஜாதி சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளாக இருந்து எனவும் பலர் பல உத்திகளைக் கையாண்டு நாட்டுக்குச் சுதந்திரம் என்பதோடு, தம் ஜாதி மக்களுக்கும், பெண்களுக்கும் சுதந்திரம் வேண்டும் என குரல் கொடுத்தவர்கள் இருந்தனர். அதில் குறிப்பிடத்தக்கவர்களாக இருப்பவர்கள் ஒரு சிலர். இத்தகையோரில் நாடார் சமூகத்தினர் மதித்துப் போற்றும் சமூக சேவையாளர் திரு.சூ.ஆ.முத்து நாடார் அவர்களின் சிந்தனையை மையமாகக் கொண்டு இந்த ஆண்டு த.ம.அ வின் சித்திரைப் புத்தாண்டு வெளியீடு மலர்கின்றது.

திரு.சூ.ஆ.முத்து நாடார்

சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தம் சமூகத்துக்குச் சேவையாற்றி அம்மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் அளவிற்கு உயர்ந்தவராக திரு.சூ.ஆ.முத்து நாடார் அவர்கள் திகழ்கின்றார். 

1919ம் ஆண்டு இவர் தொடக்கிய ஒரு பத்திரிக்கை நாடார்கள் சமூகத்துக்கு மாத்திரமல்லாமல் சுதந்திர எண்ணத்தை விரிவாக்கச் செயலாற்றியதில்  முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் திகழ்ந்தது. நாடார் குல மித்திரன் எனப் பெயரிட்டு இந்தப் பத்திரிக்கையின் முழு பொறுப்பையும் எடுத்துச்  செயல்பட்டு வந்தார் இவர்.அருப்புக்கோட்டையிலிருந்து தாமே ஆசிரியராகவும் திரு.சொக்கலிங்கபாண்டியன் என்பவரை உதவி ஆசிரியராகவும் கொண்டு பணியாற்றினார்.

இந்த மாதாந்திர வெளியீடாக வந்த நாடார் குல மித்திரன் 1919 தொடங்கி 1931ம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் தொடர்ந்து வெளி வந்தது. அரசியல் கொள்கைகளோடு நாடார் சமூகத்து மக்களின் மேம்பாட்டிற்காகப் பல சிந்தனைகளை வித்திட்ட ஒரு சஞ்சிகையாகவும் இது திகழ்ந்தது.

மார்க்சிய பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் வே.ஆணைமுத்து அவர்கள் சூ.ஆ.முத்துநாடார் நூற்றாண்டு விழா மலரில் இப்படிக் குறிப்பிடுகின்றார். 
...அன்று நாடார் குல மக்கள் ஈ.வெ.இராமசாமியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டனர். 

அருப்புக்கோட்டையை அடுத்த பாலையம்பட்டியில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநாடு 31.10.1922 இல் நடைபெற்றது. அம் மாநாட்டின் தலைவர் ஈ.வெ.இராமசாமி. அவர் அன்று தமிழ்நாடு காங்கிரஸ் காரியக் கமிட்டியின் செயலாளர். அருப்புக்கோட்டை பால்ய நாடார்கள் சிலர் அன்று மாலையே அங்கு அவரைப் பேட்டி கண்டு  அடுக்கடுக்காக 15 வினாக்களை ஈ.வெ.ராவிடம் விடுத்தனர்.

அத்தனை வினாக்களையும் உள்வாங்கி ஒரு சொற்பொழிவு போன்று ஈ.வெ.ரா. அளித்த விளக்கமான விடை முழுதும் நாடார் குல மித்திரன் ஏட்டில் வெளிவந்தது.

ஈ.வெ.ரா  அப் பேட்டியின் போது அளித்த விடை அன்றைய இழிந்த சமுதாய அமைப்பை அப்படியே படம் பிடித்துக் காட்டியது. அதனை அடியோடு மாற்றிட அவர் உறுதி பூண்டதை வெளிப்படுத்தியது.

ஈ.வெ.ராவின் சிந்தனைகள் பதிவு செய்யப்பட்டு மற்றவர்களுக்கு இன்று வரையில் ஆய்வுகளுக்குக் கிடைப்பனவற்றுள் இதுவே முதவ்லாவது ஆவணம் ஆகும். பெரியாரின் சிந்தனைகள் தொகுப்பு வரலாற்றில் இது முதன்மை வாய்ந்த ஆவணம் ஆகும். இந்தப் பதிவை முதன் முதலாகச் செய்தவர் அருப்புக்கோட்டை சூ.ஆ.முத்து நாடார் அவர்களே ஆவார். பெரியாருக்கென்று ஒரு சொந்த ஏடு குடி அரசு 2.5.1925 இல் தான் தொடங்கப்பட்டது. ஆனால் 1922 அக்டோபர் பதிவு நமக்கு நாடார் குல மித்திரன் ஏட்டில் கிடைக்கின்றது...


பக்தராகவும், தேசியவாதியாகவும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டார் சூ.ஆ.முத்து நாடார் அவர்கள்.இவர்தான் தனது நாடார் குல மித்திரனில் 1929 பெப்ரவரியை (மாசி மாதம் 14 ஆம் நாள்) ஈ வெ. ராம சகாப்தம் -4 என முதன் முதலாகக் குறித்தார்.

மகாத்மா காந்தி அவர்கள் தன் சுயசரிதையை அரிஜன் பத்திரிக்கையில் ஆங்கிலத்தில் வெளியிட்டு வந்ததை மொழி பெயர்த்து முத்து நாடார் தமிழில் சத்திய சோதனை என்று தலைப்பிட்டு வெளியிட்டார். இது மக்களின் சிந்தனையில் அழியா இடத்தைப் பிடித்தது. 

இலங்கை பர்மா போன்ற நாடுகளுக்கும் பயணம் செய்து அங்கெல்லாம் நாடார் குல மக்களின் வளர்ச்சியில் பங்காற்றினார்.

பக்திப் பாடல்கள், அம்மானை பாடல்கள் சுயமரியாதைத் தாலாட்டு பாடல்களை எழுதி தாமே வெளியிட்டு சுதந்திர சிந்தனைக் கொள்கைப் பிரச்சாரகராகத் திகழ்ந்தார்.

இது மட்டுமல்லாமல் பலகலைத் திறன்களும் கொண்டிருந்தார்.  நாடகம் எழுதுதல், மற்போர் செய்தல், சிலம்பம் ஆடுதல், இசை நிகழ்ச்சி நடத்துதல் என தன் திறமையைப் பண்முகப்படுத்தியிருந்தார். வயலின் ஆர்மோணியம் மிருதங்கம் போன்ற இசைக்கருவிகளை மீட்டும் திறனும் பெற்றிருந்தார்.

பொதுப்பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். அருப்புக் கோட்டை மாதர் முன்னேற்றச் சங்கத்தினருக்கு  உரிய முத்து நாடார் ஹால் இவரது நன்கொடைக்கு இன்றும் சான்று பகர்ந்து நிற்கின்றது.

அருப்புக்கோட்டை மாதர் முன்னேற்ற சங்கம், 3வது ஆண்டு விழா - 11.1.1953 (நடுவில்)


நாடார் குல மக்களின் நலன்கருதி அமைக்கப்பட்ட சென்னை அருப்புக்கோட்டை நாடார் லாட்ஜ் வாங்கப்பட இவர் ஆற்றிய பங்களிப்பு முதன்மையானது.

17வது மாகாண திராவிடகழக (ஜஸ்டிஸ்) மாநாடு
4-வது மாகாண சுயமரியாதை மாநாடு 29,30.9.1945, திருச்சி
அருப்புக்கோட்டை பிரத்நிதிகள் பெரியாருடன் எடுத்துக் கொண்ட படம் சூ.ஆ.முத்து நாடார் ஈ.வெ.ராவுக்குப் பின் நிற்கின்றார்.



திரு.ஈ.வெ.ரா அவர்கள் 1950ல் திரு.முத்து நாடாரின் 70வது பிறந்த நாளுக்கு வந்திருந்த போது அவ்வேளையில் வெளியிடப்பட்ட  மலருக்கு அளித்த தனது உரையில் இப்படிக் கூறுகின்றார்.
..
நண்பர் முத்து நாடார் அவர்களது நட்பு எனக்கு சுமார் 25 ஆண்டுகளாக இருந்து வருவதாகும். எங்கள் நட்பும், எம்மில் ஒருவரைப் பற்றி ஒருவர் கொண்டுள்ள எண்ணங்களும் இந்த 25 ஆண்டுகளில் ஒரு சிறு மாறுதலுமில்லாது ஒரேபடித்தாய் இருந்து வருவனவாகும் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் மகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறேன்.

.. முத்து நாடார் அவர்களது குலத் தொண்டிற்கு எடுத்துக் காட்டு என்னவென்றால் அவர் நாடார் குல மித்திரன் என்று நடத்தினாலும் பெருவாரியான எதிர்ப்புக்கும் தொல்லைக்கும் உள்ளான சுயமரியாதை இயக்கத்தில் கலந்து கொண்டு தொண்டாற்றியதும், ஆங்காங்கு சமுதாய பேதமும் இழிவும் நீங்கும்படியான சீர்திருத்தப் பிரச்சாரம்செய்ததும், குல நலத் தொண்டாற்றுவதற்கு  என்றே துவக்கப்பட்ட நாடார் மகாஜன சங்கத்திற்கு உறுதுணையாய் இருந்து வந்து பணியாற்றியதும் முதலியவையே ஆகும்....

முத்து நாடாரின் உண்மையான நண்பர்
சென்னை            ஈ.வெ.ராமசாமி
30.8.51

இத்தகைய சமூகத்தொண்டாற்றிய இப்பெரியாரின் முயற்சியில் வெளியிடப்பட்ட நாடார் குல மித்திரன் சஞ்சிகையின் 12 ஆண்டுகளின் முழுத் தொகுப்பையும் இந்தச் சித்திரைப் புத்தாண்டு நாளில் வெளியிடுவதில் தமிழ் மரபு அறக்கட்டளை பெருமை கொள்கின்றது. இதன் ஆரம்பமாக இன்று 3 சஞ்சிகைகளை வெளியிடுகின்றோம்.

இந்தச் சஞ்சிகைகளோடு திரு.சூ.ஆ.முத்து நாடார் பற்றிய ஏனைய தகவல்களையும் அவ்வப்போது மின் தமிழில் வழங்க உள்ளோம்.

சமூக வரலாற்றில் ஆர்வம் உள்ளோர், அதிலும் குறிப்பாக தமிழகத்தின் 20ம் நூற்றாண்டின் ஆரம்ப கால அரசியல் சமூக நிலையில் ஆர்வம் உள்ளோர்களுக்கு இந்தத் தொகுப்புக்கள் அனைத்தும் விருந்தாக அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.



நன்றி:
இத்தகைய வரலாற்று ஆவணம் த.ம.அ வின் மின்னாக்கத்தில் இடம்பெறுவதற்கு முக்கியக் காரணமாக் இருந்தவர்களை நினை கூர்தல் தேவை. இந்த முழு சஞ்சிகையையும் பாதுகாத்து வைத்திருந்த மதுரையைச் சார்ந்த திரு.திருநீலகண்டனின் துணைவியார் அவர்கள் திரு.முத்து நாடார் அவர்கள் உறவினர். அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த சிவகாசி திருமதி.திலகபாமா அவர்களுக்கு நமது நன்றி என்றும் உரியது. எனது தமிழக பயணத்தின் போது நான் நிச்சயமாக சிவகாசி செல்ல வேண்டும் என்று வற்புறுத்திக் கூறிய டாக்டர்.நாகண்ணனுக்கும் எனது நன்றி. த.ம.அ வைப்பற்றிய அறிமுகம் ஆனவுடன் இவற்றை மின்னாக்கம் செய்து பாதுகாப்போம் எனக் கூறியவுடனேயே தாமே முழு பொறுப்பை எடுத்துக் கொண்டு பணியில் இறங்கி தனித்தனிக் கோப்பாக மின்னாக்கம் செய்து தந்துள்ளார் திரு.திருநீலகண்டன் அவர்கள். இவற்றை தனித்தனி மின்னூலாகச் செய்து நான் த.ம.அ வலைப்பக்கத்தில் இணைக்க உள்ளேன். அதன் தொடக்கமாக இன்று மூன்று இதழ்களின் மின்னூல் வடிவம் உங்கள் பார்வைக்குக் கிடைக்கின்றது. 

சூ.அ.முத்து நாடாரின் 1920க்கு முன்னான தோற்றாம்

1920க்குப் பின்

அகவை முதிர்ந்த தோற்றம்

ஆன்மீகத் தோற்றம்




திரு.திருமதி.திருநீலகண்டன் நாடார் குல மித்திரன் முழு தொகுப்பையும் காட்டுகின்றார்


சுபா, திரு.திருமதி.திருநீலகண்டன்



திலகமா, திரு.திருநீலகண்டன்




அன்புடன்
முனைவர்.சுபாஷிணி 
[தமிழ் மரபு அறக்கட்டளை]

மறுமொழிகள்

2 comments to "தமிழ் மரபு அறக்கட்டளை சித்திரை புத்தாண்டு சிறப்பு வெளியீடு - நாடார் குல மித்திரன்"

chandrasekaran said...
June 30, 2013 at 6:43 AM

நன்றி,
1920 ஆம் ஆண்டு முதல் நாடார்களின் வரலாற்றுத் தொகுப்பை வெளியிட்டமைக்கு நன்றி.

Nirmal said...
January 23, 2018 at 5:17 AM

சிறப்பு

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES