பதங்களும் ஜாவளியும் - பக்தியும் சிருங்காரமும் (2)

0 மறுமொழிகள்

பதங்களையோ ஜாவளியையோ இப்படி வார்த்தைகளைக் கேட்டு நாம் எந்த முடிவுக்கும் வரமுடியாது. ஏனெனில் அன்று ஆடிக்கொண்டிருந்தவர்கள், கௌரி அம்மாள், பாலசரஸ்வதி போன்றவர்கள். அபிநய தர்ப்பணை ஆங்கிலத்தில் எழுத ஆனந்த குமாரஸ்வாமிக்கு உதவியவர் மைலாப்பூர் கௌரி அம்மாள் என்று தெரிகிறது. பாலசரஸ்வதியைப் பற்றி ஏதும் சொல்லவே தேவையில்லை. ரவீந்திர நாத் தாகூரையும், மாயா ப்ளீசெட்ஸ்காயாவையும், சத்யஜித் ராயையுமே தன் நடனத்தில் மயங்கச் செய்தவர் அவர். ஒரு உன்னத நிகழ்ச்சி. பரதமே சிருங்காரம் தானே, சிருங்காரத்தை விட்டால் பரதம் ஏது? என்பவர் அவர். இப்படி ஒரு பார்வை வித்தியாசத்துக்கெல்லாம் இக்கலையில் இடம் உண்டு தான். சிருங்காரத்தையே முற்றிலுமாக ஒதுக்கி பக்தியையே அழுத்தமாகக் கொள்ளும் ருக்மிணி தேவிக்கும் இதில் இடம் உண்டு தான். அதுதானே நடனம் பிறந்த பரிணாமம் பெற்ற வரலாறே. ஆனாலும் நான் பார்த்த ஒரு காட்சி.

உன்னைத் தூதனுப்பினேன் என்னடி நடந்தது
உள்ளது உரைப்பாய் சகியே

என்று தொடங்குகிறது அந்த பதம். 'தலைவனுக்கு என்ன ஆயிற்று? ஏன் அவர் வரவில்லை? என்று போய் பார்த்து வா' என்று தன் தோழியை அனுப்புகிறாள் தலைவி. தோழி திரும்பி வருகிறாள். தலை கலைந்து, நெற்றி குங்குமம் அழிந்து நெற்றியில் பரவியிருக்கிறது. ஆடையும் கலைந்து காணப்படுகிறது. கன்னங்களோ கன்னிப் போய் சிவந்திருக்கிறது

என்னடி நடந்தது? என்ற கேள்வி கேட்கும் முகத்தின் பாவங்களும், ஆங்கீகா அபிநயமும், கண்கள் பேசும் பாவங்களும் ஒன்றல்ல, இரண்டல்ல. முதலில் சாதாரண கேள்வி, பின்னர், தோழிக்கு வழியில் ஏதோ நேர்ந்து விட்டதோ என்ற கவலை, பின்னர், போன இடத்தில் வேறு யாரும் அவளை ஏதும் செய்து விட்டனரோ என்ற கலக்கம், இது தலைவன் செய்துவித்த கோலம் என்றால், அது தன்னை நினைந்து தூது சென்றவள் இரையானாளா, அல்லது, தலைவன் தான் தூது வந்தவளைத் தான் விடுவானேன் என்று செய்த அலங்கோலமா, அல்லது, தூது சென்றவளே தலைவனை மயக்கித் தனக்குச் செய்த துரோகமா... இப்படி 'என்னடி நடந்தது?" என்ற சாதாரணமாகத் தோன்றும் கேள்வியில், நடனமாடும் பெண்ணின் கற்பனைக்கும் நடனத் திறனுக்கும் ஒரு விஸ்தாரமான வெளியை பரதமும் அதன் சஞ்சாரி பாவமும் உருவாக்கிக் கொடுத்து விடுகின்றன. அது ஒரு உலகம். ஒரு அனுபவம். அப்போதே நடனமாடும் கணத்தில் தோன்றி அப்போதே மறையும் அனுபவம். நினைவுகள் மாத்திரம் தங்கி, பின் காலம் மெதுவாக மங்கி மறையச் செய்துவிடும் அனுபவம். இப்போது தங்கி இருப்பது பதம் மாத்திரமே.

இது தான் ஒரு சில கலைகளின் உன்னதமும் சோகமும். அகப்பாடல்களும் சரி, பக்தி கால தேவாரமும், பாசுரங்களும் சரி. எழுதப்பட்டவை அல்ல. பாடப்பட்டவை. பின்னர் நினைவு கூர்ந்து சேர்க்கப்பட்டவை. எத்தனை அழிந்தனவோ தெரியாது. லக்ஷக்கணக்கில் ஞான சம்பந்தர் பாடியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. மிஞ்சியுள்ளது முன்னூத்திச் சொச்சம். இப்படித்தான் கீர்த்தனைகளும் பதங்களும். தியாகய்யர் பாடியதில் கிடைப்பது எழுநூறோ என்னவோ தான். இராமலிங்க ஸ்வாமிகள் பாடிச் செல்ல பாடிச் செல்ல உடன் சென்றவர்கள் பின் நினைவிலிருந்து எழுதியவை தாம் மிஞ்சியவை. இப்படித்தான் பதங்களும், ஜாவளிகளும். §க்ஷத்திரக்ஞர் பாடப் பாட அருகில் இருந்து கேட்டவர்கள் எழுதி வைத்தவை தான் எஞ்சியவை. தமிழிசை இயக்கம் இருந்திருக்க வில்லையெனில், எவ்வளவு பதங்களும் கீர்த்தனை களும், மாரிமுத்தாப் பிள்ளை, முத்துத் தாண்டவர், சுப்புராமயயர் போன்றவர்களது கிடைத்திருக்கக் கூடும் என்பது தெரியவில்லை. கிடைத்த ஜாவளிகள் என, டி.பிருந்தா தொகுத்து ம்யூசிக் அகாடமி பிரசுரித்தது என ஒரு குறிப்பு மு. அருணாசலம் ஆங்கிலத்தில் எழுதியுள்ள தமிழ் இசைப் பாடலகள் பற்றிய புத்தகத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. என் பிரதியில் புத்தகத்தின் பெயர் கூட இல்லை.

எத்தனை பேருக்கு

என்றைக்கு சிவகிருபை வருமோ - ஏழை
என் மனச் சஞ்சலம் அறுமோ

என்ற பதம் நீலகண்ட சிவன் எழுதியது என்பது தெரிந்திருக்கும். இதே போல

வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கர் சொன்னாலும்
உள்ளங்குழையுதடி கிளியே - ஊனுமுருகுடீ

என்ற கிளிக்கண்ணி ஏதோ சித்தர் பாடல் என்று நான் என் அறியாமையில் ஒரு காலத்தில் நினைத்துக் கொண்டிருந்தேன். இது அம்பா சமுத்திரம் சுப்பராயஸ்வாமி என்பவர் இயற்றியது. இது இன்னும் நிறைய கண்ணிகளைக் கொண்டது. அவர் ஒரு தலைமைக் காவலராக (ஹெட் கான்ஸ்டபிள்) இருந்தவர் என்றும் தெரிகிறது. அவர் கண்ணிகள் தான் ஏதோ சித்தர் பாடல் போல், நாட்டுப் பாடல் போல மிகப் பிராபல்யமாகியிருக்கிறதே தவிர பாவம் அம்பா சமுத்திர ஏட்டையாவை நாம் மறந்துவிட்டோம் என்று தோன்றுகிறது. "என்னடி நடந்தது" எனற பதத்திற்கு அபிநயித்த நடனமணி யார் என்பதும் அவரது அன்றைய மாலை கலையும் அன்று பார்த்த ரசிகர்களின் நினைவுகளோடு மறைந்து விட்டது போல.

நமது வரலாற்றில் எல்லாமே வாய்மொழியாகத்தான் ஒரு தலைமுறை தன் கலைகளை இன்னொரு தலைமுறைக்கு கொடுத்து வந்துள்ளது. அப்படித்தான் கலைகள் ஜீவித்து வந்துள்ளன. எழுத்து தோன்றிய பின்னும் வாய்மொழி மரபின் முக்கியத்துவம் முற்றாக மறைந்து விடவில்லை. பாரதியே தனக்குச் சொல்லிக்கொடுத்துள்ள பாடம் வேறு, அச்சில் வந்துள்ள பாடம் வேறு என்று சிறுமியாக பாரதி பாடக்கேட்டு வளர்ந்த யதுகிரி அம்மாள் தன் பாரதி நினைவுகளில் எழுதுகிறார். பாரதிக்கே அந்த கதி என்றால், தாசிகளின் நடன வாழ்க்கையில் தான் பதங்கள் வாழும் என்ற நிலையில், தாசிகளும் சமூகத்தால் இழிவுபடுத்தப்பட்டு, கோவில்களும் அவர்களைக் கைவிட்ட நிலையில், பதங்களுக்கும் ஜாவளிக்கும் நேரும் கதியைப் பற்றிச் சொல்லவேண்டும். நேற்று மறைந்த பால சரஸ்வதியின் ஆட்டப் பட்டியலைப் (repertoire) பார்த்தால் பிரமிக்க வைக்கும் எண்ணிக்கையில் அதில் வர்ணங்களும்(13), பதங்களும்(97), ஜாவளிகளும்(51) இருக்கும். அவ்வளவு நிறைவான ஆட்டப்பட்டியல் வேறு யாருக்கும் இருக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால் பாலசரஸ்வதிக்கு இவை எல்லாம் தஞ்சை சகோதரர் காலத்திலிருந்து அவர் குடும்பத்திற்கு கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தவை. அவர் குடும்ப சொத்து போல. அந்த வரலாற்றின் தாக்கம் அதில் இருக்கும். எதற்குச் சொல்கிறேன் என்றால் பாலசரஸ்வதியின் இந்த ஆட்டப்பட்டியலில் தமிழின் பங்கு என்ன என்று பார்த்தால் ஏமாற்றமாக இருக்கும். 13 வர்ணங்களில் தமிழில் 2-ம், 97 பதங்களில் தமிழ்ப்பதங்கள் 39-ம் தான் இருந்தன. 51 ஜாவளிகளில் தமிழ் ஜாவளி ஒன்று கூட இல்லை.. இப்போது பால சரஸ்வதி இல்லை. அவரைச் சொல்லிக் குற்றம் இல்லை. அன்றைய நிலை அப்படி. மேடையில் ஆடப்பட்டால் தான் தமிழ்ப் பதங்களும் வர்ணங்களும், ஜாவளிகளும் வாழும். வாய்மொழி மரபின் இடத்தை அச்சு எடுத்துக்கொண்டுவிட்ட பிறகு அவை அச்சிலாவது பதிவாக வேண்டும்.

தற்செயலாக நடை பாதையில் கிடைத்த புத்தகங்களில் அச்சிடப்பட்டிருக்கும் பதங்களையும் ஜாவளிகளையும் ஒன்று சேர்த்துத் தரலாமே என்ற எண்ணம் ஒரு கிருஷாங்கினிக்குத் தோன்றி இந்த தொகுப்பு நம் கைகளுக்கு இப்போது வந்துள்ளது. நிறைய இன்னும் இருக்கின்றன. கிருஷாங்கினியைப் போல நம் கண்ணுக்குப் படுவதையெல்லாம் நாம் தொகுப்பது நம் மண்ணுக்கும், மொழிக்கும், கலைகளுக்கும் நாம் ஆற்றும் கடமையாகும்.

கடைசியில் எனக்கு ஏற்பட்ட ஒரு ஆச்சரியத்தைச் சொல்லத் தோன்றுகிறது. எனக்குள் கோபால கிருஷ்ண பாரதியைப் பற்றி ஒரு பிம்பம் இருக்கிறது. அது அவரது நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, பின் அவரைப் பற்றி உ.வே. சா எழுதியுள்ள சின்ன வாழ்க்கைச் சரிதம் இவற்றிலிருந்து பெற்றது. கிருஷாங்கினியின் தொகுப்பில் கோபால கிருஷ்ண பாரதியின் பெயரில் ஒரு கீர்த்தனை இருக்கிறது.

பேயாண்டி தனைக் கண்டு நீயேண்டி மையல் கொண்டாய்
பெண்களுக்கழகாமோ...

என்ற பல்லவியுடன் தொடங்குகிறது அது. சிவனைப் பற்றியது தான். நிந்தாஸ்துதி தான். இருப்பினும் இப்படியும் கோபால கிருஷ்ண பாரதி எழுதியிருக்கிறாரா? என்று ஆச்சரியப்பட வைத்தது இது.

_______________________________________________________________

தமிழில் பரத நாட்டியப் பாடல்கள்: தொகுப்பு: கிருஷாங்கினி: சதுரம்
பதிப்பகம், 34- சிட்லபாக்கம் 2-வது பிரதான சாலை, தாம்பரம் சானடோரியம்,
சென்னை-47 பக்கம் 204 -ரூ 100

வெங்கட் சாமிநாதன்/4.3.08

மறுமொழிகள்

0 comments to "பதங்களும் ஜாவளியும் - பக்தியும் சிருங்காரமும் (2)"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES