டெல்லியில் தமிழக் விவசாயிகள்

1 மறுமொழிகள்
இன்றும் நேற்றும் தமிழ் சினிமா நடிகர்களைப் பற்றிய பதிவுகள் பேஸ்புக் பக்கத்தில் அதிகமாக வந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக இன்று காலை டெல்லியில் விவசாயிகளுடன் நின்று அவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த திரு.ப்ரகாஷ்ராஜ், விஷால் பற்றியும் இவர்கள் சினிமாவை மட்டும் பார்த்துக் கொண்டு போகவேண்டியதுதானே என்ற தொணியிலான சில பதிவுகளையும் பார்த்தேன்.

கலைத்துறையில், அதாவது சினிமாவில் நடிப்பவர்கள் சமூக சேவை தொடர்பான சில விசயங்களைச் சொல்வதை நம்மில் பலர் கேலி, கிண்டல், ஏளனம் என்ற வகையில் பார்க்கின்றனர்.

உலகின் ஏனைய சமூகத்தை விட இந்திய சூழலில் கலைத்துறையினருக்கு ஏகோபித்த மதிப்பு என்பது இருக்கின்றது. பாமர மக்கள் தொடங்கி படித்த கல்விகற்றோர் வரை ஏனையோருக்கு வழங்காத மரியாதையைக் கலைத்துறையினருக்கு வழங்குகின்றனர்.

தமிழர்கள் புலம்பெயர்ந்த ஏனைய எல்லா நாடுகளிலும் ஒரு தமிழ்ச்சினிமா கலைஞர் வந்து விட்டால் அவருக்கு அளிக்கப்படும் மரியாதை, உபசரிப்பு, கைச்செலவுத்தொகை என்பவை எல்லாம், தமிழுக்கு பல வகையில் சேவையாற்றும் ஏனைய அறிஞர்களுக்கு கிடைக்காதவை. அப்படியே கிடைத்தாலும் அதை விட பன்மடங்கு மேல் தான் கலைத்துறையினருக்கு அளிக்கப்படுகின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.

தமிழ்ச்சினிமாவில் அல்லது டிவி சீரியலில் வருகின்ற பிரபலங்கள் மட்டும் தான் என்றல்ல... துணை நடிகர்கள் முதல் கொண்டு அவர்களது பெயர், குடும்ப வரலாறு என்பன நமது உலகத் தமிழர்கள் அறிந்து வைத்திருப்பார்கள்.
ஆனால் தமிழ், வரலாறு, சமூகச் சேவை இப்படிப்பட்ட துறையில் உள்ளோர் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள்.

அந்த அளவிற்கு சினிமா பிரபலங்கள் மேல் மக்களுக்கு மோகம் இருக்கின்றது. இது நிதர்சனம்.

இப்படிப்பட்ட சூழலில், சில நடிகர்கள், சமூகச்சேவை தொடர்பான விசயங்களில் தலை காட்டுவதை ஏன் பலர் கிண்டலும் கேலியும் செய்து பேசுகின்றனர்? இப்படிப் பேசுகின்ற, எழுதுகின்ற ஒவ்வொருவரும் இதே அந்த நடிகர் அவர் முன்னால் இருந்தால் எப்படி நடந்து கொள்வர்? யோசிப்போம்.
அப்போது அவர்களுக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதை... அவர்களைப் பார்த்து இவர்கள் வெளிப்படுத்தும் உடல்மொழி..

அவர்களோடு செல்பி எடுத்துக் கொள்ள செய்யும் முயற்சி, தவிப்பு..
இதெல்லாம் இல்லை என, குறைகூறும் இந்த நபர்களால் சொல்ல முடியுமா?
இன்றைய சூழலில் விவசாயிகள் நிலை மத்திய அரசுக்கு செல்ல வேண்டும். அது சினிமா ஊடகத்து பிரபலங்களால் முன்னெடுக்கப்படும் போது மேலும் அதிக கவனிப்பை பெறுகின்றது. இது உண்மைதானே. .நேற்று இல்லாத ஊடக கூட்டம் இன்று காலை விவசாயிகளைச் சுற்றிக் கொண்டு இருந்தது. ஊடகங்களின் பார்வை விரிவாக அவர்கள் கோரிக்கை மேல் படுவதற்கு சினிமாக்காரர்கள் சிலரது முயற்சிகள் உதவினால் வரவேற்க வேண்டியதுதானே.

ஏசி போட்டுக் கொண்டு, டிவி பார்த்துக் கொண்டு செல்போனில் பேஸ்புக் பதிவுகளுக்கு லைக் போட்டுக் கொண்டிருப்போருக்கு இன்று ஏலத்தில் போகப்போகும் ஒரு விவசாயின் வீட்டைப் பற்றித் தெரியுமா? அல்லது கடனைத்திருப்பி வாங்க வங்கிக்காரர்கள் வந்து வாசலில் நிற்பார்கள் என பயந்து பயந்து நிமிடத்துக்கு நிமிடம் மனதில் சாகும் விவசாயிகளின் அச்சம் புரியுமா?

இன்றைய சூழலில் தமிழகத்தில் எங்கிருந்து உதவி வந்தாலும் அது விவசாயிகளின் நலனுக்கு உதவுமா என்று தான் பார்க்க வேண்டுமே தவிர சினிமாக்காரர்கள் பெயர் வாங்கி விடுவார்களே என நினைத்து அவர்களைத் தாக்குவது சரியானதல்ல!
-சுபா


வட்டார வழக்கு: திருநெல்வேலி பேச்சு வழக்கு - பகுதி 4

0 மறுமொழிகள்
வணக்கம்.
நெல்லை வட்டார வழக்கு இனிமையானது அதில் உள்ள சிறப்பான மேலும் சில சொற்களை நமக்காக வழங்குகின்றார் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் திரு.ஆமோஸ் நவீன் இளையராஜா.


குறிப்பு: பேஸ்புக் பக்கத்தில் த.ம.அ பதிவுகளைப் பார்த்து தாமும் பங்களிப்புச் செய்ய வேண்டும் என முன் வந்து ஆக்ககரமான முறையில் ஒரு பதிவினை செய்து அனுப்பி வைத்த  தம்பி ஆமோசின் முயற்சியைப் பாராட்டுகின்றேன்!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​​


மண்ணின் குரல்: மார்ச் 2017: தென்பரங்குன்றம் கன்னிமார் கோயில் குலதெய்வங்கள் வழிபாடு

0 மறுமொழிகள்
வணக்கம்.

மதுரை மாநகரில் ஏராளமான கோயில்கள் அமைந்துள்ளன. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலைப் பற்றி பெரும்பாலோர் அறிந்திருப்போம். அங்கே தென்பரங்குன்றம் என ஒரு பகுதியும் உள்ளது. திருப்பரங்குன்ற மலையில் கிரிவலம் வரும் வழியில், அதாவது மலையின் நேர் பின் பக்கத்தில் இந்தத் தென்பரங்குன்றம் அமைந்துள்ளது. தென்பரங்குன்ற மலையின் சமணர் குடை வரை கோவில் ஒன்று உள்ளது. தற்போது உமையாண்டார் கோயில் என இக்கோயில் அழைக்கப்படுகின்றது.  இந்தக் கோயில் அமைந்திருக்கும் பகுதிக்குக் கீழே உள்ள காட்டுப்பகுதியில் ஆங்காங்கே மரங்களின் கீழ் வராகி, நாகர், முனியாண்டி சாமி என நாட்டார் தெய்வங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழர் பண்டைய பாரம்பரியத்தின் வழிபாட்டுக் கூரான குலதெய்வ வழிபாடு என்பது இப்பகுதியில் சிறப்புப் பெற்றுள்ளது. இங்கே மூலைக்கு மூலை அமைந்திருக்கும் சிலைகளை மக்கள் ஒவ்வொரு சிறப்பு நாட்களிலும் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். 


இங்குள்ள குடைவரைக் கோயிலில் பாதுகாவலராக இருக்கும் பெரியவர் ஒருவர் என் உடன் வந்து இந்தக் குலதெய்வ சாமிகள் இருக்கும் இடங்களுக்கு என்னை அழைத்துச் சென்று ஒவ்வொரு தெய்வத்தைப் பற்றியும்  விளக்கம் அளித்தார். இதே பகுதியில் சற்றே உயரமான ஒரு குன்று பகுதியில் சப்த கன்னிமார்  கோயில் அமைந்துள்ளது. இங்கே கருப்புசாமி, விநாயகர், நாகம்மா ஆகிய தெய்வங்களும் வழிபாட்டில் இடம்பெறுகின்றன. 

அருகிலேயே  ஒரு சிறு கூடாரத்திற்குள் சிவாலயம் ஒன்று அமைந்துள்ளது.  சிவலிங்கத்திற்குப் பால் சுனை கண்ட சிவபெருமான் என்பது பெயர். இங்கு பஞ்சலிங்க சன்னிதி ஒன்றும் அமைந்திருக்கின்றது.

இந்தப் பகுதி அழகிய வனம் சூழ்ந்து இயற்கை எழிலுடன் அமைந்திருக்கின்றது. குலதெய்வ வழிபாடு இன்றும் மிகச்சிறப்புடன் நடத்தப்படுகின்ற ஒரு பகுதியாக இது திகழ்கின்றது.


விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.de/2017/03/blog-post_18.html
யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=iBpJhzgYVMc&feature=youtu.be


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​வட்டார வழக்கு - ஒப்பாரிப் பாடல்கள் -ஆண் பாடகர்

0 மறுமொழிகள்
வணக்கம்.

ஒப்பாரிப் பாடல்கள் வழி  வழியாய் தமிழர் பாரம்பரியத்தில் வருகின்ற ஒரு கலை.  பொதுவாக இறந்தோர் இல்லங்களில் வயதான பெண்கள் ஒப்பாரிப் பாடல்களைப் பாடுவர். ஆனால் வித்தியாசமாக ஆண் ஒருவர் ஒப்பாரிப் பாடலை பாடுவதை இப்பதிவில் கேட்கலாம்.இந்தியாவின் மிகப் பழைமையான மாநகராட்சியான மெட்ராஸ் பட்டிணத்தின் வட சென்னையில் வாழும் மக்களிடையே நிலவும் வாய் மொழிப் பதிவு இது. மரண நிகழ்வில் பாடப்படும் பட்டினத்தார் பாடல்கள் இதில் முக்கியத்துவம் பெருகின்றன.

பூதவுடலை எடுக்கும்போதும், இடுகாட்டிற்குக் கொண்டு போகும் வழியிலும், இடுகாட்டின் நுழை வாயிலில் உள்ள அரிச்சந்திரன் கோயிலின் முன்னேயும், பின்பு பிணத்தைப் புதைக்கும்போதும் ஏராளமான பாடல்கள் பாடப்படுகின்றன. அந்தப் பாடல்கள் பெரும்பாலும் பட்டினத்தார் பாடல்களாக இருக்கின்றன. அந்த பாடல்களின் சிறப்பு அவற்றைக் கேட்கும் போது புலப்படும். அந்தப் பாடல்களை அவர்கள் ஒப்பாரிப் பாடல்களாவும் சடங்குப் பாடல்களாவும் கருதுகின்றனர்.குறிப்பு.  இந்த ஒலிப்பதிவுகளையும் புகைப்படங்களையும் நமக்கு வழங்கிய திரு.கௌதம சன்னா அவர்களுக்கு நமது நன்றி.

பாடல் பதிவு 1
பாடல் பதிவு 2


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​​


மண்ணின் குரல் ஒலிப்பதிவுகள்: நகரத்தார் பேச்சு வழக்கு - பகுதி 3

0 மறுமொழிகள்
வணக்கம்.

இந்தப் பதிவில் திருமதி.விசாலாட்சி வேலு, நகரத்தார் வழக்கில் பாடப்படும் சில பாடல்களைப் பற்றி விவரிக்கின்றார்.

கிராமிய பாடல்கள் என்றாலே எளிமையும் அழகும் நிறைந்திருக்கும் தானே. சின்னச் சின்னப் பாடல்கள் தாம் என்றாலும் இவையும் மறக்கப்படும் சூழல் உருவாகிக்கொண்டிருப்பதைத் தானே காண்கின்றோம்!


பதிவைக் கேட்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​​


மண்ணின் குரல்: பெப்ரவரி 2017: கோரிப்பாளையம் தர்கா, மதுரை

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழகத்தின் மதுரையில் வைகையாற்றின் வடகரையில் உள்ள நகர்ப்பகுதிக்கு முகமது கோரியின் நினைவாக, அல்லது கோரியின் படைகள் வந்திறங்கிய இடம் என்ற பொருளில் கோரிப்பாளையம் என்ற பெயர் வழங்கி வருகின்றது. இங்கே ஒரு தர்காவும், பள்ளிவாசலும் உள்ளன. இங்குள்ள தர்காவில் சுல்தான் அலாவுதீன் உதௌஜி அவர்களும், அவரது மருமகனான குத்புதீன் பிரோம் ஷாக்குஸ் அவர்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இந்த தர்க்காவின் உட்புறம் நடைவழியில் உள்ள மதுரை நாயக்க மன்னன் வீரப்பநாயக்கர் காலக் கல்வெட்டு (கி.பி.1573) தில்லி ஒரு கோல் சுல்தானென்று குறிப்பிடுகின்றது. வாரங்கல் என்பது இக்கல்வெட்டில் ஒரு கோல் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்களிடையே ஒரு கருத்தும் நிலவுகின்றது..

இப்பள்ளிவாசலுக்கு கூன் பாண்டியன் காலத்தில் 14 ஆயிரம் பொன் அளிக்கப்பட்டுள்ளதென்றும் அதனைக் கொண்டு ஆறு  சிற்றூர்கள் வாங்கப்பட்டு இப்பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்டது என்றும் வீரப்ப நாயக்கன் காலக்கல்வெட்டிலிருந்து அறிய முடிகின்றது.

பாண்டிய மன்னர்களுக்குத் தேவையான குதிரைகளை அரேபியாவிலிருந்து தருவித்த போது, குதிரை வணிகத்தை ஒட்டி அரேபிய நாட்டைச் சேர்ந்த இசுலாமியர் பலர் மதுரைக்கு வந்தனர் என்பதும் ஒரு குறிப்பிடத்தக்க விசயமாகின்றது.

நன்றி: மாமதுரை - பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்.


விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.de/2017/03/blog-post_12.html
யூடியூபில் காண:     https://www.youtube.com/watch?v=gYV0Ptg0ioA&feature=youtu.be


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​


மண்ணின் குரல் ஒலிப்பதிவுகள்: நகரத்தார் பேச்சு வழக்கு - பகுதி 2

0 மறுமொழிகள்
வணக்கம்.

இந்தப் பதிவில் திருமதி.விசாலாட்சி வேலு, நகரத்தார் வழக்கில் உள்ள பண்டிகைகள் பற்றியும் அப்பண்டிகைகளின் போது செய்யப்படும் உணவு பதார்த்தங்கள் பற்றியும் சொல்கின்றார்.

பொதுவான நம் பேச்சு வழக்கில் கேட்டிராத பல சொற்கள் இதில் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருப்பதை இப்பதிவைக் கேட்கும் போது உணரலாம்.

பதிவைக் கேட்க!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​​


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES